சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாவட்ட அளவில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ- ஜியோ) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஸ்டிரைக்கில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் 2,053 பேர் ஈடுபட்டனர். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வான 'டெட்' தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட அளவில் அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள், வருவாய்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சேர்ந்த அனைத்து தரப்பு ஊழியர்களும் நேற்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்ட அளவில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், பள்ளிக்கு வந்த மாணவர்கள் காலை 11:00 மணிக்கு பின்னரே ஆசிரியர்களின்றி வீட்டிற்கு ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, காளையார்கோவில் ஆகிய 5 இடங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்தையா, கணேசன், ரஞ்சித்குமார், மாநில நிர்வாகிகள் சிங்கராயர், கோவிந்தராஜ், முருகன், கலைச்செல்வி, லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் பங்கேற்றனர். மானா மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், காளையார்கோவிலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், காரைக்குடியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாயதைனேஷ், சிங்கம்புணரியில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், சேக் அப்துல்லா தலைமை வகித்தனர். மாவட்ட உயர்நிலை குழு முத்துப்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். ஸ்டிரைக்கில் 2,053 பேர் பங்கேற்பு * வருவாய்துறையில் உதவியாளர் முதல் தாசில்தார் வரை 1,331 பேர் உள்ளனர். இதில் 1,061 பேர் பணிக்கு வந்திருந்தனர். ஸ்டிரைக்கில் 270 பேர் ஈடுபட்டனர். * வளர்ச்சித்துறையின் கீழ் ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 605 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் நேற்று 268 பேர் பணிக்கு வந்திருந்தனர். ஸ்டிரைக்கில் 317 பேர் ஈடுபட்டனர். * கல்வித்துறையின் கீழ் ஆசிரியர், ஊழியர்கள் 3,500 பேர் பணிபுரிகின்றனர். இதில், நேற்றைய ஸ்டிரைக்கில் 1,466 பேர் பங்கேற்றனர்.