திருப்புத்துார் வயல்களில் அறுவடை துவங்கியது
நெற்குப்பை: திருப்புத்துார் வட்டார வயல்களில் விவசாயிகள் தங்கள் நெல் அறுவடையை துவங்கியுள்ளனர்.திருப்புத்துாரில் இந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால் கண்மாய்களில் நீர் சேகரமாகி நெல் சாகுபடி கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது. பலத்த மழை பூச்சி,நோய்த் தாக்குதல் இருந்தாலும், பெரும்பாலான பயிர்கள் பாதிக்கப்படவில்லை. இதனால் ஓரளவு நல்ல விளைச்சலுடன் பயிர்கள் செழித்தன. கடந்த சில நாட்களாக பரவலாக நெல் அறுவடை துவங்கியுள்ளது.சன்னரக நெல் ஏக்கருக்கு 1.5 டன் அளவில் மகசூல் கிடைத்துள்ளது. விவசாயிகளிடம் உரங்கள்,பூச்சி மருந்து பயன்பாடு அளவாக இருந்ததும் தெரியவந்துள்ளது. விதைப்பு முதல் தற்போது அறுவடை வரை விவசாயிகள் தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். தற்போது தொழிலாளர் தட்டுப்பாட்டால் அறுவடை குறித்த நேரத்தில் செய்ய முடியவில்லை.பொங்கல் முடிந்த பின்னர் மேலும் அறுவடை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.பரியாமருதிப்பட்டி செல்வி, லெட்சுமி கூறுகையில், உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதனால் அரசு கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ 2500 நிர்ணயித்தால் தான் விவசாயிகளுக்கு பாதிப்பு இருக்காது. கடந்த ஆண்டு சன்னரகம் ரூ 2800 வரை விலை போனது' என்றார். திருப்புத்தூர் ஒன்றியத்தில் நெற்குப்பையில் பொங்கல் முடிந்த பின்னர் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட உள்ளது.