திருப்புவனத்தில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு
திருப்புவனம் : திருப்புவனத்தில் தடைகளை மீறி பலரும் பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர்கள்,டம்பளர்களை பயன்படுத்துவதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பூ கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் என 200க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள், பேப்பர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும் தடையை மீறி பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.ஆரம்பத்தில் அதிரடியாக பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், அபராதம் என நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது கண்டு கொள்வதில்லை.அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதால் திருப்புவனத்தில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. டீகடைகளில் டீ, காபி, பால் போன்ற சூடான பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி பார்சல் செய்து தருகின்றனர். ஓட்டல்களில் காய்கறிகள், சாம்பார், ரசம், மோர், சாதம் உள்ளிட்டவற்றை சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து ரெடியாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்திலேயே அதிகாரிகள் கண்முன்னே இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டல்களிலும் பிளாஸ்டிக் பேப்பர்கள் பயன்படுத்தி உணவு பரிமாறுவதுடன் அதிலேயே இட்லி, பரோட்டா, தோசை உள்ளிட்ட பொருட்களையும் பார்சல் செய்து தருகின்றனர். ஒரு பிளாஸ்டிக் பேப்பர் ஒரு ரூபாய் என்பதால் பலரும் பிளாஸ்டிக் பேப்பர்களை ஒட்டல்களில் பயன்படுத்தி வருகின்றனர்.திருப்புவனத்தில் தினசரி 8 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் 50 சதவிகித குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இவற்றை அழிக்க முடியாமல் துப்புரவு பணியாளர்கள் இரவு நேரத்தில் தீ வைத்து வருகின்றனர். பேரூராட்சி குப்பை கிடங்கு, செல்லப்பனேந்தல் விலக்கு, திதி பொட்டல், மாரநாடு தடுப்பணை உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகளை தரம்பிரிக்காமல் அப்படியே கொட்டி தீவைத்து வருகின்றனர். இதனால் சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.