| ADDED : மார் 14, 2024 11:43 PM
இளையான்குடி : பங்குனி நேற்று துவங்கியதை தொடர்ந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா வரும் 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.முக்கிய விழாவான பொங்கல் விழா வரும் ஏப்ரல் 4ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீச்சட்டி, கரும்பாலை தொட்டில், முடிக்காணிக்கை, ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்வர்.பங்குனி பிறந்த நேற்று ஏராளமான பக்தர்கள் தாயமங்கலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தனர். இதற்காக காரைக்குடி, மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.