| ADDED : மார் 07, 2024 05:38 AM
சிவகங்கை: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு மாநில முதல்வர் படம் போட்டு நோட்டீஸ் வினியோகம் செய்வதாக, பா.ஜ.,வினர் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளில் படிப்படியாக இத்திட்டம் மூலம் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.மத்திய அரசின் நிதி உதவியுடன், மக்கள் பங்களிப்பு தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். கிராமங்கள் தோறும் வழங்கப்படும் நோட்டீசில், ஜல்ஜீவன் திட்டத்தை தமிழக அரசு நிதியில் செயல்படுத்துவது போல், மக்களிடம் மாயை ஏற்படுத்தும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் படம் போட்டு, குடிநீர் திட்டம் குறித்த விளக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதை கண்டித்து சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியநாதன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, பொது செயலாளர் ஏ.நாகராஜன், ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு நாகேஸ்வரன், நகர் தலைவர் உதயா நேற்று மாலை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். கலெக்டர் ஆஷா அஜித், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.