| ADDED : டிச 30, 2025 05:42 AM
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்புள்ளது. மானாமதுரையில் மகளிருக்கு அரசு மேல் நிலைப்பள்ளி உள்ள நிலையில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் இப்பகுதி யில் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மேல்நிலைப் படிப்பு படிக்க அரசு பள்ளி இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் மானா மதுரை நகர் பகுதியிலும் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் 20 கி.மீ.துாரமும், போதிய போக்குவரத்து வசதி இல்லாத கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், இடைக்காட்டூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் செலவும் மற்றும் காலவிரயமும்,ஏற்படுவதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று இளையான்குடி நகர் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் உயர் கல்வி படிப்பதற்கு அரசு மேல்நிலை பள்ளி இல்லாத காரணத்தினால் முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு அரசு மேல் நிலைப் பள்ளி துவங்க மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வியாளர் பாண்டி கூறிய தாவது: மானாமதுரை, இளையான் குடியை சுற்றி 350க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் படிப்பிற்காக மானா மதுரை மற்றும் இளையான்குடிக்கு வந்து செல்கின்றனர். மானா மதுரையில் ஆண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில் 10ம் வகுப்பு வரை மானாமதுரையில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக அலைய வேண்டியுள்ளது. இளையான்குடியில் மாணவிகளுக்கு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தினம்தோறும் 20 கிலோ மீட்டர் துாரம் சென்று படிப்பதால் அவர்களுக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுகிறது. தமிழக அரசு மாணவ, மாணவிகளின் நலன் கருதி வரும் கல்வி ஆண்டிலாவது மானா மதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், இளையான்குடியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.