லாரி -- வேன் மோதல்; 2 சகோதரர்கள் பரிதாப பலி
திருப்புவனம்: லாரி மீது வேன் மோதிய விபத்தில் இரு சகோதரர்கள் பலியாகினர்; ஆறு பேர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே மென்னந்தியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி, 52; சேலத்தில் மோட்டார் பம்ப் விற்பனை, பழுது பார்த்தல் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது உறவினர் மென்னந்தியில் இறந்துவிட்டார். இறுதி சடங்கில் பங்கேற்க சவுந்தரபாண்டி, அவரது சகோதரர் சந்திரன், 48, இரு பெண்கள் உட்பட 8 பேர், வேனில் சேலத்தில் இருந்து புறப்பட்டனர். வேனை சந்திரன் ஓட்டினார். நேற்று மதியம், 1:30 மணிக்கு மதுரை- - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் சரக்கு லாரியின் பின்னால் வேன் சென்றது. சரக்கு லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால், வேன், லாரியின் பின்புறம் மோதியது. இதில், வேன் முன்புறம் அமர்ந்திருந்த சவுந்தரபாண்டி, சந்திரன் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த ஆறு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.