| ADDED : மே 07, 2024 05:30 AM
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஒரு வார்டில் சானிட்டரி ஒர்க்கர், லஸ்கர், ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டன்ட், செவிலியர் என 5க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். கடந்த 10 வருடங்களில் பணி ஓய்வு பெற்ற லஸ்கர் பணியிடத்திற்கு பதிலாக புதிதாக பணியிடம் உருவாக்கப்படாமல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன.மேலும் ஹாஸ்பிடல் ஒர்க்கர், நர்சிங் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களில் புதிய பணியாளர்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. சானிட்டர் ஒர்க்கர் பணி ஏராளமான மருத்துவமனைகளில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது குறித்து செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் லஸ்கர் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.மேலும் ஹாஸ்பிடல் ஒர்க்கர்,நர்சிங் அசிஸ்டன்ட் பணியிடங்களில் பணியாற்றிய பணியாளர்கள் கடந்த 10 வருடங்களில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் ஆய்வுக்கு வரும் மேலதிகாரிகள் மருத்துவமனைகளில் ஏதாவது குறை இருப்பின் அதற்கு செவிலியர்கள் தான் காரணம் என அவர்களை குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சேவை மனப்பான்மையோடு அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து வரும் செவிலியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மருத்துவமனைகளில் மருந்தாளுனர் இல்லை என்றாலும் மருந்து கொடுக்கும் பணியையும், அதேபோன்று மற்ற பணிகளான ஈ.சி.ஜி., எடுத்தல், ரத்த பரிசோதனை செய்தல், மருந்து கட்டுதல் போன்ற கூடுதல் பணிகளால் செவிலியர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளும் ஊழியர்கள் பற்றாக்குறையினால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.ஆகவே தமிழக அரசு உடனடியாக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.