| ADDED : மார் 04, 2024 05:16 AM
பூவந்தி; பூவந்தி -- சிவகங்கை ரோட்டில் அடிக்கடி விபத்து நேரிட்டு உயிர்பலி ஏற்படுவதால் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கையில் இருந்து படமாத்துார், திருமாஞ்சோலை, பூவந்தி வழியாக மதுரை வரை அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் இருந்து பூவந்தி வழியாக தொண்டி வரை தேசிய நெடுஞ்சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கையில் இருந்து மதுரை செல்பவர்கள் பூவந்தி , வரிச்சியூர் வழியாகவும், தூத்துக்குடி, கொச்சி, அருப்புகோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு பூவந்தி, சக்குடி வழியாக செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றன. பூவந்தி அருகே கீரனுார் விலக்கில் அடிக்கடி விபத்து நேரிட்டு உயிர்பலி ஏற்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு பஸ் - - லாரி நேருக்கு நேர் மோதி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். பத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். நேற்று முன்தினம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, மகனும் பலியாகினர். ஐந்து பேர் காயமுற்றனர். அடிக்கடி டூவீலர் விபத்துகளும் நடக்கிறது. டிரைவர்கள் கூறியதாவது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதால் சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமாஞ்சோலையை அடுத்த குயவன்குளம் என்ற இடம் மேடாக இருக்கும் அதன்பின் சரிவான பாதையாக அமைந்துள்ள நிலையில் சொக்கையன்பட்டி விலக்கில் சிறிய குழாய் பாலம் மேடாக உள்ளதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த மேட்டு பகுதியை கணிக்க முடியாமல் துாக்கி வீசப்பட்டு எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் நேரிடுகின்றன. குயவன்குளத்தில் இருந்து பூவந்தி வரை சாலையின் உயரத்தை அதிகரிப்பதுடன் சொக்கையன்பட்டி விலக்கில் உள்ள பாலத்தையும் புதிதாக உயரத்துடன் அமைத்தால் இப்பகுதி விபத்துக்களை தவிர்க்கலாம், என்றனர்.