உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்ட கண்மாய்களில் கருவேல மரங்கள்மாயம்:அனுமதியின்றி வெட்டுவதால் வருவாய் இழப்பு

மாவட்ட கண்மாய்களில் கருவேல மரங்கள்மாயம்:அனுமதியின்றி வெட்டுவதால் வருவாய் இழப்பு

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டத்தில் டெண்டர் விடப்படாமல் கருவேல மரங்கள் வெட்டப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள், ஊரணிகள், ஓடைகள், வைகை ஆற்றின் கரையோரம், அரசு புறம்போக்கு இடங்கள் உள்ளிட்டவற்றில் கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் டெண்டர் விடப்பட்டு வெட்டி அகற்றப்படும். கருவேல மரங்களால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நீதிமன்றம் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. கண்மாய்கள், புறம்போக்கு இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வனத்துறை அதன் மதிப்பை கணக்கிட்டு வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்யும். கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வருவாய்த்துறை தான் கருவேல மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அரசு கணக்கில் சேர்க்கும். கடந்த சில ஆண்டாக கருவேல மரங்கள் வெட்ட டெண்டர் விடப்படுவதில்லை. ஒருசில இடங்களை தவிர அந்தந்த பகுதி விவசாயிகள் என்ற பெயரில் அதிகாரிகளை சரிகட்டி கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ரூ.பல கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள் சில லட்சங்களை மட்டும் அரசுக்கு செலுத்தி கடத்தி வருகின்றனர். கருவேல மரங்களை வெட்டுவதற்காகவே கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப முடியாமல் தடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதியின்றி கருவேல மரங்கள் வெட்டப்படுவதாக புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நவ., டிச., மாதங்களில் சேம்பர்கள், கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகளவில் விறகு தேவைப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் கரிகள் மும்பை, குஜராத்திற்கு அனுப்படுகிறது. நீண்ட நேரம் நின்று எரியும் திறன் கொண்டவை என்பதாலும் டிச., குளிருக்கு கரிகள் அதிகளவில் தேவைப்படும் என்பதாலும் மாவட்டத்தின் பல இடங்களில் அனுமதியின்றி கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. இது குறித்து சங்கங் குளம் பிரபு கூறியதாவது, கிருதுமால் நதிப்படுகையில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை தினசரி வெட்டி கடத்தி வருவதாகவும், முறையாக டெண்டர் விடப்படாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளேன். எனவே அனுமதியின்றி கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்களை ஆய்வு செய்து மரங்கள் வெட்டியவர்கள் மீது வழக்கு பதிந்து, உரிய இழப்பீடை அவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 08, 2025 07:16

நாம வெட்டுனா நீதிமன்றம் தடை போடும். வெட்டலைன்னா மரம் வளர்ந்திருச்சுன்னு ஒரு கூட்டம் ஒப்பாரி வெக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை