உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

 பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிவகங்கையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை 5:20 மணிக்கு பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 9:30 மணிக்கு வெள்ளை குதிரை வாகனத்தில் வெள்ளி அங்கியுடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்தார். தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு 9:00 மணி வரை ஏராளமான பக்தர்கள் சுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பரமபதவாசலை வழிபட்டனர். மானாமதுரை வீர அழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான நேற்று சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் நம்மாழ்வாருக்கு காட்சியளித்த பின்னர் அதிகாலை 5:35மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கோயிலைச் சுற்றி வலம் வந்த சுவாமிகள் தாயார் மண்டபத்திற்கு எழுந்தருளினர். மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில், இளையான்குடி பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, நித்தியபடி பூஜை முடிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:55 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 6:00 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. தீபாராதனையை தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடு ஆகி சொர்க்கவாசல் எழுந்தருளினார். காலை 8:32 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தை மும்முறை வலம் வந்தார். திருத்தளிநாதர் கோயிலில் அதிகாலை 4:15 மணிக்கு திருப்பள்ளி பூஜைகள் நடந்தன.மூலவர் யோகநாராயணப்பெருமாளுக்கு அபிேஷகம் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு தீபாராதனை நடந்தது. ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்ஸவ பெருமாள் திருநாள் மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருள பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் புறப்பாடாகி பெரிய பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எழுந்தருளினார். காலை 7:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனத்தை தொடர்ந்து ஆராதனை நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கோதண்டராமர் பெருமாள்,இளைய பெருமாள் லட்சுமணர், தாயார் சீதை பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ரங்கநாத பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பரமபத வாசல் திறக்கப்பட்டு உற்ஸவர் ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினர். கிருஷ்ணராஜபுரம் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் வளாகத்தில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை