| ADDED : நவ 24, 2025 09:31 AM
சிவகங்கை: கல்லல் ஊராட்சியின் கீழ் கல்லல், புரண்டி, மருங்கிபட்டி, இந்திரா நகருக்கு உட்பட்ட பகுதியில் 12 வார்டுகளில் 12,548 பேர் வசிக்கின்றனர். காரைக்குடி, பரமக்குடி ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக அதிகளவில் பஸ்கள் கல்லல் வழியாக வந்து செல்கின்றன. இந்த ஊராட்சிக்கு வீட்டு வரி, குடிநீர், தொழில் வரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.23 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கான தகுதி இருந்தும், இன்னும் கிராம ஊராட்சியாகவே இருக்கின்றன. இந்த ஊராட்சி தோன்றி பல ஆண்டுகளான போதும், நிரந்தரமாக பஸ் ஸ்டாண்ட் கூட கட்டித்தரப்படவில்லை. சேதமான ரோடுகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 25க்கும் மேற்பட்ட தெருக்களில் ரோடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. மழைக்கு குண்டும் குழியுமான ரோட்டில் தேங்கியுள்ள மழை நீரால் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக தெப்பக்குளம் முதல் இந்திரா நகர் வரை செல்லும் ரோடு முற்றிலும் சேதமுற்று, வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் கழிவுபோல் தேங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் அதிகளவில் செல்லும் இந்த ரோடு சேதமடைந்து காணப்படுகின்றன. இது போன்று லட்சுமிநகர், பழைய சந்தை ரோடு, விநாயகர் ரோடு உட்பட அனைத்து ரோடுகளும் சேதமடைந்து காணப்படுகின்றன. நகரில் சேதமான ரோடுகளை சீரமைக்க உள்ளாட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். இது குறித்து ஊராட்சி நிர்வாக அலுவலர் கூறியதாவது, ரோடு புதுப்பிக்க நிதி ஒதுக்கீடே இல்லை. இதனால் ரோடுகளை புதுப்பிக்க முடியவில்லை என்றார்.