| ADDED : மார் 14, 2024 11:45 PM
சிவகங்கை : காடுகளில் வளரும் புள்ளி மான்கள், காட்டு மாடுகளுக்கு கோடையில் ஏற்படும் தண்ணீர் பிரச்னையை தவிர்க்க நபார்டு வங்கி நிதி ரூ.60 லட்சத்தில் 33 இடங்களில் தடுப்பணை கட்டியுள்ளனர்.மாவட்ட வனத்துறையின் கீழ் மலைகள் மற்றும் காடுகளில் புள்ளி மான்கள், காட்டு மாடுகள், காட்டு பூனை உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. கோடையில் காடுகளுக்குள் தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்படும் பட்சத்தில் மான்கள் காடுகளுக்கு வெளியே வயல்களில் தண்ணீர் அருந்த வெளியேறுகின்றன. இது போன்ற சூழலில் நாய் கடித்தும், கிணற்றில் தவறி விழுந்தும் மான்கள் இறக்கின்றன. இதை தவிர்க்கும் விதமாக காடுகளுக்குள்ளேயே தண்ணீரை தேக்கிவைத்து விலங்குகள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். இதற்காக நபார்டு வங்கி நிதி உதவி ரூ.60 லட்சத்தில் காடுகளில் அதிக விலங்குகள் வசிக்கும் முக்கிய இடங்களில் 33 தடுப்பணைகள் கட்டி அதில் தண்ணீர் தேக்கியுள்ளனர். இதன் மூலம் மான்கள் தண்ணீருக்காக வெளியே செல்வதை தவிர்க்க முடியும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.மாவட்ட வன அலுவலர் பிரபா கூறியதாவது: 33 இடங்களில் தடுப்பணை, ஏரிகள் அமைத்துள்ளோம். மேலும் மான்கள் அதிகம் வசிக்கும் முந்திரி, யுகலிப்டஸ் காடுகளில் 21 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வு பணி 70 சதவீதம் முடிந்துள்ளன. இதற்கான நிதியை பெற்று தடுப்பணை கட்டப்படும்.