| ADDED : நவ 19, 2025 06:41 AM
காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனியில் கோயில் மற்றும் குடியிருப்பு பகுதியில் தனியார் மதுக்கடை திறந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பஸ் ஸ்டாப் எதிரே புதிதாக தனியார் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அருகிலேயே சக்தி வீரமா காளியம்மன் கோயில், மருத்துவமனை,பஸ் ஸ்டாப், சர்ச் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. விதிமுறைகளை மீறி புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டதாக கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மதுக்கடையை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்ததின் பெயரில் மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் அதிகாரிகளின் வார்த்தைகளை மீறி சிறிது நேரத்திலேயே, மீண்டும் கடையை திறந்து விற்பனை நடந்துள்ளது. அப்பகுதி மக்கள் நேற்று, தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அ.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தாசில்தார் ராஜா கூறுகையில்: மதுக்கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனை நடைபெறவில்லை. கடை திறக்கப்படுகிறதா என போலீசார் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.