சிவகங்கை வார்டுகளில் சிறப்பு கூட்டம்
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் வார்டு அளவில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்திற்கு அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களது வார்டுகளில் கூட்டத்தை நடத்தவில்லை. சிவகங்கை நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை செய்திட வார்டு வாரியாக கவுன்சிலர் தலைமையில் சிறப்பு கூட்டங்கள் நடத்தவும்,அந்தந்த பகுதி மக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பகுதி தேவைகளை தெரிவிக்கலாம் என நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தெரிவித்திருந்தார். இது குறித்து நகராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. நேற்று 1 முதல் 25 வார்டுகளுக்கு கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை வகிப்பதும் எனவும், நகராட்சி சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை மனுவாக பெற்று நிவர்த்தி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. நேற்று இந்த கூட்டத்தை அ.தி.மு.க., அ.ம.மு.க., கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நடத்தவில்லை. தி.மு.க., காங்., கட்சி கவுன்சிலர்கள் வார்டுகளில் மட்டுமே நடத்தப்பட்டது. பெரும்பாலான வார்டுகளில் பொதுமக்கள் பாதாள சாக்கடை இணைப்பு குறித்தும், கழிவுநீர் கால்வாய் துார்வாராதது குறித்தும், தெருவிளக்கு எரியாதது குறித்தும், குப்பை பிரச்னைகள் குறித்து புகார் அளித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜா கூறுகையில், ஏற்கனவே நடந்த பல கூட்டங்களில் பொது மக்கள் கொடுத்த கோரிக்கைகள் இன்னும் நிவர்த்தி செய்யவில்லை. கவுன்சிலர்கள் பலமுறை வார்டுகளில் உள்ள குப்பை, குடிநீர் பிரச்னைகளை பேசியுள்ளோம். இதுவரை அவை சரிசெய்யப்படவில்லை. நகரில் குடிநீர், குப்பை பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. 5 நாளுக்கு ஒரு முறைதான் குடிதண்ணீர் நகராட்சி சார்பில் வழங்குகின்றனர். தினசரி வழங்க எந்த நடவடிக்கையும் இல்லை. வார்டுகளில் சிறப்பு கூட்டம் நடத்தினாலும் எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க போவதில்லை. அ.ம.மு.க., கவுன்சிலர் அண்புமணி கூறுகையில், நாங்கள் வார்டு பிரச்னையை பலமுறை கவுன்சில் கூட்டங்களில் பேசியுள்ளோம். நாங்கள் பேசிய எந்த பிரச்னையும் நிவர்த்தியாகவில்லை. கண் துடைப்புக்காக போடப்படும் இந்த கூட்டத்தில் என்ன செய்ய போகிறார்கள். தெருக்கள் முழுவதும் குப்பையாக உள்ளது. நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கால்வாய்கள் முறையாக துார்வாரவில்லை. இந்த வார்டு கூட்டத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என்றார்.