சிவகங்கை: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி கொலை செய்த இரு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கிழவனுாரைச் சேர்ந்தவர் சற்குணம், 55, டீக்கடைக்காரர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, டீக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, டூ - வீலரில் சென்ற இருவர் அரிவாளால் இவரை, ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை செய்தனர். போலீசார் விசாரித்து, கிழவனுாரைச் சேர்ந்த மாதவன், 32; ஹரிராஜ், 32, ஆகியோரை கைது செய்தனர். கொலையை கண்டித்து நேற்று மதியம் பரமக்குடி ரோட்டில் மறியல் நடந்தது. போலீசார் கூறியதாவது: சற்குணம் சகோதரர் கருப்பையாவுக்கும், மாதவன், ஹரிராஜ் தரப்பினருக்கும் இருந்த முன்பகையால், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கருப்பையாவை கொலை செய்ய திட்டமிட்டு, டூ - வீலரில் ஹரிராஜ், மாதவன் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது வந்த பஸ்சில் ஏறி கருப்பையா, காளையார்கோவில் சென்று விட்டார். அவரை விட்டு விட்ட ஆத்திரத்தில், கிழவனுாருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கருப்பையாவின் தம்பி சற்குணத்தை கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இம்மாவட்டத்தில், கடந்த ஜன., முதல் நவ., 21 வரை 35 கொலைகள் நடந்துள்ளன. மாதத்திற்கு குறைந்தது 2 முதல் அதிகபட்சம் 6 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர்.