கண்துடைப்பாக நடக்கும் ஊருணி மேம்பாடு
காரைக்குடி; புதுவயல் பேரூராட்சியில் ஊருணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் பொருத்தப்படாமல் வீணாகி வருகிறது. புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 11 வார்டு வாணியர் தெருவில் 2023 ஆம் ஆண்டு ஊருணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி பராமரிக்கப்பட்டது. ஊருணியை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டது. மின் விளக்குகளும் பொருத்தப்பட்டது. மேலும், சிறுவர்கள் விளையாடும் பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தப்படவில்லை. ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. தவிர, மின் விளக்குகளும் எரியவில்லை. பல லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டம் பயனின்றி வீணாகி விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் கூறுகையில்: ஊருணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊருணி பராமரிக்கப்பட்டு நடைபாதை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பணிக்கான பில் வழங்கவில்லை. விரைவில், பொருட்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.