சித்திரை திருவிழாவிற்காக சுத்தமாகும் வைகை ஆறு
மானாமதுரை : மானாமதுரையில் சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆறு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனந்தவள்ளி சோமநாதர் மற்றும் வீர அழகர் கோயில்களில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு மே 1 ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்குகிறது.மே 8 ல் திருக்கல்யாணம், மே 9 ம் தேதி தேரோட்டம், மே 12ல் வீரஅழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது.இப்பணிக்கு பின் திருவிழாவின் போது நகராட்சி சார்பில் வைகை ஆற்றிற்குள் குடிநீர், மின்விளக்கு, தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்துதரப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.