| ADDED : டிச 05, 2025 05:49 AM
காரைக்குடி மாநகராட்சி கடைக்கோடியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே 2024 மார்ச்சில் 2.70 ஏக்கரில் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இங்கு, புதிய வாகனங்கள் பதிவு, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கார், பைக், கனரக வாகனங்கள் என இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெர்மிட் இல்லாத வாகனங்கள், வரி கட்டாத வாடகை வாகனங்கள், லாரிகள் என பல்வேறு வாகனங்களை அவ்வப்போது ஆய்வு செய்து முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர், பறிமுதல் செய்கிறார். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தி வைக்க, வளாகத்தில் போதிய இடவசதி இருந்தாலும் பாதுகாப்பு வசதி இல்லை. பறிமுதல் வாகனங்களை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கலாம் என்று அதிகாரிகள் நினைத்தாலும் அங்கு நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. ஏற்கனவே அங்கு ஏராளமான வாகனங்கள் ஏலம் விடப்படாமல் வீணாகி வருகிறது. மேலும் அலுவலகத்தில் வாகனங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களும் வைக்கப்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் காம்பவுண்ட் சுவர் இல்லை. நெடுஞ்சாலையை ஒட்டிய, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. தவிர, அலுவலகம் செல்லும் சாலை மண்சாலையாக காட்சியளிப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடும். எனவே அலுவலகம் செல்லும் சாலையை தார்ச்சலையாக மாற்றுவதோடு, அலுவலக வளாகத்திற்கு காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.