உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காய்ந்த நிலையில் பயிர் மழைக்காக காத்திருப்பு

 காய்ந்த நிலையில் பயிர் மழைக்காக காத்திருப்பு

தேவகோட்டை:தண்ணீரின்றி காயும் பயிர்களை பார்த்து கண்ணீரோடு புயலுக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். தேவகோட்டை தாலுகாவில் 10 ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். பருவ காலத்திலேயே முதல் கட்டமாக விதைத்தனர். மழையை தாங்கும் டீலக்ஸ் பொன்னி, குறைந்த செலவில் நிறைந்த பலனை தரும் ஆர்.என்.ஆரை நெல் விதைத்தனர். முதலில் போட்ட போது சரியான நேரத்தில் மழை பெய்யாததால் பயிர் மேலே வெளி வராமல் மண்ணுக்குள்ளேயே போய்விட்டது. லேசாக முளைத்த பயிரும் காய்ந்து விட்டது. இந்த சூழ்நிலையில் தீபாவளி நேரத்தில் மழை பெய்தது. இதை நம்பி விவசாயிகள் வேகமாக மீண்டும் விதை நெல்லை துாவினர். தேங்கியிருந்த தண்ணீர் பாய்ச்சியதில் நெற் பயிர் மண்ணை விட்டு வெளியே கிளப்பியது. விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டனர். களையெடுக்கும் பணியிலும் இறங்கினர். ஆனால் கடந்த 15 தினங்களாக விவசாயிகள் மழையை எதிர்பார்த்து ஏக்கத்தில் உள்ளனர். மீண்டும் காயும் நிலைக்கு பயிர்கள் செல்வதாக விவசாயிகள் புலம்ப தொடங்கி விட்டனர். திருப்பாக்கோட்டை திருநாவுக்கரசு கூறியதாவது: புயல் மழை வரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே இந்த பகுதியில் மழை பெய்யும் என கூறிய போது புயல், மழை ஏமாற்றி வேறு பக்கம் போய்விட்டது. பயிரும் காய்கிறது.2 நாளில் மழை பெய்தால் விவசாயம் பிழைக்கும். விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடுவர் என்றார். மற்றொரு விவசாயி கூறுகையில் டவுனில் மழை துாறல் விழுகிறது. கிராமத்தில் அதுவும் இல்லை இந்த வாரத்திற்குள் மழை பெய்தால் நல்லது. இல்லையெல் இன்சூரன்ஸ் தான். அரசு சரியான இழப்பீடு தந்து காப்பாற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை