பத்திரப்பதிவு செய்ய அலைக்கழிப்பு சார் - பதிவாளர் இழப்பீடு தர உத்தரவு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த ஹாஜா நஜ்முதீன், தனக்கு சொந்தமான வீடு பழுதடைந்ததால், புதிய வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு பணம் தேவைப்பட்டதால் தனக்கு சொந்தமான காலிமனையை விற்க முடிவு செய்தார்.இதற்காக, அய்யம்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முயன்ற போது, அவருக்கு முறையாக பத்திரப்பதிவு செய்து தராமல், சார் - பதிவாளர் மகாலட்சுமி அலைக்கழித்துள்ளார்.மனமுடைந்த ஹாஜா நஜ்முதீன், தஞ்சாவூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து, ஹாஜா நஜ்முதீன் சொத்தை, விற்பனை கிரைய ஆவணம் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்து கொடுக்க வேண்டும். பதிவு கட்டணங்களில் ஏதாவது மாறுபாடு இருந்தால் அதை அப்போதைய சார் - பதிவாளர் மகாலட்சுமி தனிப்பட்ட முறையில் ஏற்க வேண்டும். சேவை குறைபாட்டிற்காகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், 5 லட்சம் ரூபாயை இழப்பீடாகவும், வழக்கு செலவு தொகையாக, 10,000 ரூபாயை சேர்த்து வழங்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.