உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மஹாராஷ்டிரா பவன் கட்ட இடம் தமிழக அரசு தர வேண்டுகோள்

மஹாராஷ்டிரா பவன் கட்ட இடம் தமிழக அரசு தர வேண்டுகோள்

தஞ்சாவூர்:''மஹாராஷ்டிரா மாநில, மக்களுக்காக, தமிழகத்தில் மஹாராஷ்டிர பவன் கட்ட, தமிழக அரசு இடம் வழங்க வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி அமைச்சர் உதய் சாமந்த் தெரிவித்தார். தஞ்சாவூர், அரண்மனை வளாகத்தில், தமிழ்நாடு மராட்டியர் சங்க வெள்ளி விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு மராட்டியர் சங்கத் தலைவர் விஸ்வஜித் காடேராவ் தலைமை வகித்தார். இவ்விழாவில், மஹாராஷ்டிர மாநில தொழில் துறை மற்றும் மராத்தி மொழி அமைச்சர் உதய் சாமந்த் பேசியதாவது: தமிழகத்தில், ஒரு ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கொடுத்தால், மராட்டிய மக்களுக்காக மஹாராஷ்டிர அரசு செலவில் மஹாராஷ்டிரா பவன் கட்டித் தரப்படும். மராத்தி மொழி பேசுபவர்களும், தமிழ் பேசு பவர்களும் மஹாராஷ்டிராவில் எப்படி ஒற்றுமையாக உள்ளனரோ, அதே போல, தமிழகத்திலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, குத்துவிளக்கேற்றி விழாவை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மராட்டியர் சங்க வெள்ளி விழாவுக்கான லோகோவை, அமைச்சர் செழியனும், உதய் சாமந்தும் இணைந்து வெளியிட்டனர். இவ்விழாவில், தஞ்சாவூர் தி.மு. க., - எம்.பி., முரசொலி, மஹாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ., சுகாஷ் பாபர், தமிழ்நாடு மராட்டா சங்கத்துக்கான மஹாராஷ்டிரா பிரதிநிதி கரண் சம்பாஜி ராவ், தஞ்சாவூர் அரண்மனை இளவரசர்கள் சிவாஜி ராஜா போன்ஸ்லே, பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை