| ADDED : ஜூலை 11, 2011 10:57 PM
தேனி : உதவித்தொகை கேட்டு தேனி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, மாற்றுத்திறனாளியை உறவினர் தூக்கி வந்தார். ஆண்டிபட்டி ராஜகோபாலன்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). மாற்றுத்திறனாளியான இவரால் நடக்க முடியாது. ஆறாம் வகுப்பு வரை படித்துள்ள 90 சதவீதம் ஊனமுற்ற சான்று பெற்றுள்ளார். ஓராண்டுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளார். உதவித்தொகை கேட்டும் விண்ணப்பித்துள்ளார். ஒவ்வொரு முறையும் உறவினர் ஒருவரால் தூக்கி வரப்பட்டு மனு கொடுத்து செல்கிறார். நேற்றும் வழக்கம் போல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தார். பல முறை மனு தந்தும் பலனில்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சோகத்துடன் சீனிவாசன்.
தேவாரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துக்குமார்(32) ஐந்தாண்டுகளாக மூன்றுசக்சகர வாகனம கேட்டு விண்ணப்பித்து வருவதாகவும், இனியாவது வாகனம் தர வேண்டும் என நேற்றும் படிக்கட்டுகளில் தவழ்ந்தபடியே மனு கொடுக்க வந்திருந்தார். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவி தொகை, மூன்று சக்கர வாகனம் தர நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜெயசீலி தெரிவித்தார்.