உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை அறுவடை தாமதம் விதையில்லா திராட்சை மகசூல் குறையும்

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திராட்சை அறுவடை தாமதம் விதையில்லா திராட்சை மகசூல் குறையும்

கம்பம்: ஒடைப்பட்டி வட்டாரத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விதையில்லா பச்சை மற்றும் கருப்பு திராட்சை அறுவடை தாமதமாகிறது.தேனி மாவட்டம் ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என்ற பெயர் பெற்றது. கம்பம் பள்ளத்தாக்கில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி வட்டாரத்தில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது. தற்போது விதையில்லா திராட்சை சாகுபடி செய்த விவசாயிகள், பன்னீர் திராட்சைக்கு மாற துவங்கி உள்ளனர். பன்னீர் திராட்சை ஆண்டிற்கு மூன்று முறையும், விதையில்லா திராட்சை ஆண்டிற்கு ஒரு முறையும் அறுவடை செய்யப்படும். விதையில்லா திராட்சை ஆகஸ்ட் மாதம் அறுவடை துவங்கி அக்டோபர் முதல் வாரம் வரை இருக்கும்.தற்போது ஒடைப்பட்டி, தென்பழநி, வெள்ளையம்மாள்புரம் பகுதிகளில் மட்டும் விதையில்லாத திராட்சை கணிசமான பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறுவடை துவங்கும். ஆனால் இந்தாண்டு சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஆகஸ்ட் கடைசி வாரமாகும் என்ற நிலை உள்ளது.இது தொடர்பாக விதையில்லா திராட்சை சாகுபடி செய்யும் ஓடைப்பட்டி விவசாயி கலாநிதி கூறுகையில், அதிக வெப்பம் மற்றும் தற்போது மழை காரணமாக விதையில்லா திராட்சை அறுவடை கால தாமதமாகும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விதையில்லா திராட்சை மகசூல் குறைய வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு 18 டன் கிடைக்கும். தற்போது 10 டன் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் என்றார். பன்னீர் திராட்சை விலை கிலோ ரூ.80 முதல் 100 வரை கிடைத்து வருகிறது. பன்னீர் திராட்சையும் வரத்து இல்லாததால் இந்த விலை கிடைத்து வருவதாக சுருளிப் பட்டி திராட்சை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் முகுந்தன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி