| ADDED : ஜூலை 30, 2024 06:26 AM
தேனி : தேனியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணியில் தேசிய நெஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையின் நிலம் எடுப்பு பிரிவு, நகராட்சி நகரமைப்பு பிரிவு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் பணிகள் நடைபெறுவதில் தொய்வு நிலவுகிறது.தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.26 கி.மீ., துாரத்திற்கு தேனி சிட்கோ அருகே உள்ள தனியார் பள்ளியில் பாலம் துவங்கி தேனி குயவர் பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து பங்களாமேடு வரை உள்ள ரோட்டில், ஒரு புறம் இருந்த ரயில்வே ஆக்கிரமிப்புகள் ஓராண்டிற்கு முன் அகற்றப்பட்டன. ஆனால் மற்றொரு புறம் உள்ள பட்டா நிலங்கள் அகற்றப்பட வில்லை.அதே நிலை சார்நிலை கருவூல அலுவலகம் அருகிலும், எதிரிலும் நீடிக்கிறது.மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் 23 பட்டா நிலங்கள் உள்ளன. இவற்றிற்கு நில எடுப்பு பிரிவினர் உரிய தொகை கொடுத்து உரியவர்கள் பெற்று தந்தால் பணிகள் தீவிரப்படுத்த இயலும். இடத்தை கையப்படுத்துவதற்கு நிலம் எடுப்பு பிரிவில்உள்ள சர்வே அளவிற்கும், நகராட்சி நகரமைப்பு பிரிவின் சர்வே பிரிவில் உள்ள ஆவணத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது. நகராட்சி நகரமைப்பு பிரிவும், நிலம் எடுப்பு பிரிவும் இணைந்து இடத்தை கையகப்படுத்த வேண்டும். ஆனால் இரு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் 23 பட்டா இடங்களை கையகப்படுத்த முடியாமல் உள்ளது. இந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை அரசு கணக்கில் தயாராக இருந்தும் சர்வே முடிவு பெறததால் இடம் கையகப்படுத்த நிலை உருவாகி உள்ளது. மேலும் நிலங்களுக்கு தவறாக மதிப்பிட்டு, கூடுதல் பணம் வழங்கி விட்டால் திரும்ப பெற முடியாது என அதிகாரிகள் எண்ணுகின்றனர். நகரமைப்பு பிரிவினர், நெடுஞ்சாலைத்துறையை கை காட்டு கின்றனர். இதனால் முக்கோண சிக்கல் நிலவுவதால், மேம்பால பணிகளில் தொடர் தொய்வு நிலவுகிறது.