| ADDED : ஜூன் 09, 2024 03:54 AM
தேனி, : தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு தேனியில் இருந்து வெளியூர்களுக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 என அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் பலரும் உறவினர்கள் வீடுகள், சொந்த கிராமங்களுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர். இவர்கள் ஊர் திரும்ப அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, கம்பம் 1,2, தேவாரம், குமுளி ஆகிய அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்போக்களில் இருந்து 383 பஸ்கள் மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மூலம் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. பள்ளிகள் துவங்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் வெளி மாவட்டங்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.அதே போல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்காக 17 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.