| ADDED : ஏப் 04, 2024 03:46 AM
கூடலுார், : தேனி மாவட்டத்தில் அ.ம.மு.க., கட்சியினரின் வாகனங்கள் அதிகமாக உலா வருவதால் தி.மு.க., நிர்வாகிகள் 'கிலி' அடைந்துள்ளனர்.தேனி லோக்சபா தொகுதியில் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வில் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க.,வில் நாராயணசாமி, பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க.,வில் தினகரன் போட்டியிடுகின்றனர். இத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்கதமிழ்ச்செல்வன், நாராயணசாமி பிரசாரத்தை தீவிரபடுத்தியுள்ளனர். அதே வேளையில் தினகரன் தேனி தொகுதியில் முன்பு எம்.பி.யாக இருந்தபோது பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதாகவும், அனைவரிடத்திலும் நன்கு பழக கூடியவர் என்ற ரீதியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.ஆளும் கட்சியான தி.மு.க., எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் பிரசார களத்தை தீவிரப் படுத்தியுள்ளனர். அதே வேளையில் வி.ஐ.பி., தொகுதியாக உள்ள தேனியில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து அ.ம.மு.க., வினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். வெளியூர் நிர்வாகிகள் கிராமங்களில் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் கார்களில் உலா வருவது தி.மு.க., நிர்வாகிகளை கலக்கமடைய வைத்துள்ளது.