| ADDED : ஜூலை 24, 2024 05:52 AM
சின்னமனுார் : சின்னமனுார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வாழை தொகுப்பு திட்டம் செயல்படுத்தாமல் முடங்கி உள்ளது.சின்னமனுாரை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்கறி, வாழை சாகுபடி நடைபெறுகிறது. வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், பதப்படுத்துதல், இருப்பு வைத்தல், ஏற்றுமதி, புதிய ரகங்கள் அறிமுகம், நோய்களுக்கான ஆராய்ச்சி என பல அம்சங்கள் அடங்கிய வாழைத் தொகுப்பு திட்டம் ரூ.130 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்து ஒராண்டிற்கும் மேலாகி விட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணி நடைபெறவில்லை. ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வாழைக் கென கட்டப்பட்ட குளிர்பதன கிட்டங்கியும் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதே வளாகத்தில் மொத்த காய்கறி வணிக வளாகம் அமைக்க முடிவு செய்து அந்த பணியும் நடைபெறவில்லை. வேளாண் வணிக துறைக்கும், தோட்டக்கலைத்துறைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதுவும் நின்று போனது. அதை சரிசெய்ய எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் பயனளிக்கவில்லை.மொத்த வணிக வளாகத்திற்கும், வாழை தொகுப்பு திட்டத்திற்கும் ஏற்ற இடமாகும். ஆனால் என்ன காரணத்தாலோ இரண்டு திட்டங்களும் செயல் வடிவம் பெறாமல் முடங்கி விட்டன.