| ADDED : ஜூன் 22, 2024 05:51 AM
தேனி: பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தை பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சி மக்கள் முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.இவ்வூராட்சியில் எ.புதுக்கோட்டை, ஆரோக்கிய மாதா நகர், நேரு நகர், ஜே.கே.,நகர், அண்ணா நகர், அருளானந்தபுரம், கக்கன் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 4000 வாக்காளர்களாக உள்ளனர். இங்கு 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் மேம்படுத்த வில்லை என கூறி அப்பகுதி நிர்வாகிகள் அன்னப்பிரகாஷ், எட்வர்டு ஆகியோர் பொது மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனு வழங்கினர். மனுவில், 'ஆரோக்கியமாதா நகரில் 2001ல் துவக்கப்பட்ட ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. எங்கள் பகுதியில் 300 மாணவ, மாணவிகள் 8 முதல் 10 வரை படிக்கும் மாணவர்களாக உள்ளனர். இதனால் அப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் ரேஷன் கடை, சமுதாயக்கூடம், உடற்பயிற்சி கூடம் அமைத்துத்தர வேண்டும். ஏழை பெண்களுக்கு ஆடு, கோழிகள் வளர்ப்பிற்கான தொழில் துவங்க வங்கிக்கடன் வழங்க வேண்டும்' உள்ளிட்ட 21 கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுத்தினர்.