| ADDED : ஏப் 10, 2024 06:17 AM
கம்பம் : தேனி லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தேனி லோக்சபா தொகுதியில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நால்வரும் விடாமல் பிரசாரம் செய்து வருகின்றனர்.அ.ம.மு.க. தினகரன் மோடியை பிரதமராக்க தான் போட்டியிடுவதாகவும், எம்.ஜி.ஆர். சின்னத்தை வீரப்பாவும், நம்பியாரும் தூக்கி வந்தால் எப்படியோ அது போன்று இரட்டை இலையை பழனிசாமி கபளீகரம் செய்துள்ளார் என்கிறார். முன்பு தான் செய்த நன்கொடை, கோயில் பணி போன்றவற்றையும் நினைவுபடுத்துகிறார். அ.தி.மு.க., நாராயணசாமி, 'பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும்', என்பதை வலியுறுத்தி பேசுகிறார். நா.த. வேட்பாளர் பேசுவதே இல்லை. கும்பிட்டு செல்வதோடு சரி. மூவர் பிரசாரத்திலும் அ.ம.மு.க. தினகரன் பிரசாரம் மக்களை கவர்கிறது. அவருக்கு அடுத்து தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கிராமத்து பாணியில் மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம், காலை உணவு திட்டங்கள் குறித்தும், நான் உங்க பக்கத்து ஊர்க்காரன். கடந்த முறை குறைந்த ஒட்டில் தோற்று போனேன். இந்த முறை ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கிராமத்து பாணியில் பேசுவதும் வரவேற்பை பெறுகிறது. இவர்கள் மூவரின் பிரசாரத்தை விட தினகரனின் மனைவி அனுராதா பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.