| ADDED : ஜூன் 03, 2024 03:56 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் தரைப்பாலம் அருகே நீரின் வேகத்தை குறைக்கும் தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளது.வைகை அணையில் திறக்கப்படும் நீர் தரைப்பாலம் வழியாக பெரிய பாலத்தைக் கடந்து பிக்கப் அணையில் சேருகிறது. பின் அங்கிருந்து தேவைக்கு தக்கபடி ஆற்றின் வழியாகவும் கால்வாய் வழியாகவும் பாசனம், குடிநீருக்கு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு திறந்து விடப்படுகிறது. அணையில் தண்ணீர் திறக்கப்படும்போது நீர் அதி வேகத்தில் வெளியேறும். நீரின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அணை மதகுகள், தரைப் பாலத்திற்கு இடையே இரு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியேறும் நீர் தடுப்பணை போன்ற பள்ளத்தில் தேங்கி வெளியேறுவதால் வேகம் குறையும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. தற்போதுள்ள நிலையில் வைகை அணையில் இருந்து நீர் திறப்புக்கான வாய்ப்பு இல்லை. இதனால் சேதமடைந்த தடுப்புச் சுவர்களை சீரமைக்க நீர்வளத்துறை முன்வர வேண்டும்.