| ADDED : ஜூலை 31, 2024 04:55 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியில் சுகாதார சீர்கேடான சாக்கடையால் வீடுகளில் விசேசம் நடத்துவோர் ஷாமியானா தடுப்பு அமைத்து மறைக்கும் அவல நிலை உள்ளது. இரவு பகலாக கொசுக்கடியால் தவிக்கின்றனர். பேரூராட்சியால் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக மாறி உள்ளது.தேவதானப்பட்டி பேரூராட்சி 14 வது வார்டு கக்கன்ஜி காலனியில் 1500க்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதியாகும். இப் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யாமல் கழிவுநீர் தேங்கி பெரும் சுகாதார கேடு நிலவுகிறது. அடிப்படை வசதி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு நிலை உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பாண்டியராஜ், பாக்கியம், முத்தழகி, முருகேஸ்வரி ஆகியோர் தினமலர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன்ஜி காலனி குடியிருப்பு பகுதிக்கு செல்ல வேண்டுமானால் சுடுகாட்டை கடந்துதான் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை வார்டில் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து தெருவிற்குள் வரும் பாதையான பழைய சினிமா தியேட்டர் வழியாக செல்லும் பொதுபாதையை சிலர் ஆக்கிரமித்து நடைபாதையை முடக்கியுள்ளனர். அதனால் அந்த பாதையை பயன்படுத்த முடியவில்லை. அப் பகுதியில் 7 அடி உயரத்திற்கு 150 மீட்டர் பரப்பளவில் களைச் செடிகள் வளர்ந்து புதராக உள்ளது. இதில் ஏராளமான விஷ பூச்சிகள் வளர்வதால் அவை அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தினமும் புகுந்து விடுகிறது. விஷ பூச்சியினால் அப் பகுதியில் எந்த நேரம் வீட்டிற்குள் விஷ பூச்சிகள் வருமோ என்ற அச்சத்தால் மக்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.குடியிருப்பு பகுதி இரு புறமும் பெரிய அளவிலான சாக்கடை உள்ளது. சாக்கடை பல மாதங்களாக சுத்தம் செய்யாததால் டன் கணக்கில் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால் இரவு மட்டுமின்றி பகலிலும் கொசுக்கடியால் அவதிப்படுகிறோம். வீடுகளில் விசேஷம் வைத்தால் இருபுறமும் சாக்கடையை மறைப்பதற்கு ஷாமியானா பந்தல் அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.சுடுகாட்டு வழியாக வீடுகளுக்கு செல்லும் போது அப்பகுதியில் உள்ள ஆழ்துளை குழாய் நீரை பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் சேமித்து பயன்படுத்தினோம். இந்த தொட்டியில் திருகு உடைந்துள்ளதால் தொட்டியில் ஏற்றப்படும் நீர் செயற்கை நீருற்று போல் பீச்சி அடித்து வெளியேறுகிறது. அந்த தண்ணீரில் தான் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. பல மாதங்களாக அவல நிலை தொடர்கிறது.ஆண்கள், பெண்கள் சுகாதார வளாகத்தில் கோப்பைகள் சேதமடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப தெருக்குழாய் வசதி இல்லை. 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகத்தால்குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை உள்ளது. நாய்கள், பன்றிகள் தொல்லை ஏராளம். இந்தப்பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும், அங்கன்வாடி மையம் கொண்டு வர வேண்டும் என சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். சுடுகாட்டு பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்பி நடைபாதை வசதி செய்திட வேண்டும் என்றனர்.-