பெரியகுளம், : பட்டத்திக்குளம் நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் நீர் தேங்கும் பரப்பளவு குறைந்து, குட்டை போல் மாறி வருகிறது.நீர் நிலைகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சில விவசாயிகள் தங்கள் சுயலாபத்திற்கு கண்மாய், குளங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்கள் தாராளமாக நடைபெறுகிறது. பெரியகுளம் அருகேயுள்ள 60 ஏக்கர் பரப்பளவிலான பட்டத்தி குளம் கண்மாய்க்கு கும்பக்கரை அருவியில் இருந்து நீர் வரத்து வாய்க்கால் வழியாக வரும். பருவமழை காலங்களில் பெய்யும் மழை தற்போது கோடை மழையால் பெய்த மழையால் பட்டத்திகுளம் கண்மாயில் தண்ணீர் தேங்கி ஆண்டுக்கு மூன்று போகம் நெல் சாகுபடிக்கும், மா, தென்னை, வாழை உட்பட விவசாயத்திற்கு உதவும். இக்கண்மாய் நீரை நம்பி 600 ஏக்கர் நேரடியாகவும், பல நுாறு ஏக்கர் மறைமுகமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.கடந்த காலங்களில் கும்பக்கரை அருவிக்கு செல்பவர்கள் 5 கி.மீ., முன்பாக பட்டத்திக்குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவையும், அதன் அழகை பார்த்து கும்பக்கரை அருவியில் தண்ணீர் வருவதை உறுதி செய்வார். 'கும்பக்கரையை தாயாகவும், பட்டத்திக்குளத்தை சேயாகவும்' இன்று வயதில் மூத்த விவசாயிகள் கூறி வருகின்றனர்.தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் கண்மாய் சிக்கி, நீர்நிலைகள் சின்னாபின்னமாகி பரப்பளவு பாதிக்கு பாதி குறைந்துள்ளது. பொதுப்பணிதுறையினர் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால், பட்டத்திகுளம் மெல்ல, மெல்ல காணாமல் போகும் அபாய நிலை உருவாகும். கண்மாயை மீட்க வேண்டும்
ஞானகுருசாமி, முன்னாள் தி.மு.க., எம்.பி., விவசாயி, கீழப்புரவு விவசாயிகள் சங்க சட்ட ஆலோசகர்: இக் கண்மாயில் நுழையும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கேட் அமைத்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி கண்மாயின் நீளம், அகலத்தை கணக்கிட்டு புள்ளி விவரங்களை போர்டுகளில் எழுதி வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கேட்டினை அகற்ற வேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்க வேண்டும். கேள்விக்குறியாகும் விவசாயம்
ஜெயசீலன், விவசாயி, கீழப்புரவு விவசாயிகள் சங்க உறுப்பினர், பெரியகுளம்: கண்மாய் ஆக்கிரமிப்பினால் விவசாயத்தின் மீது நம்பிக்கை குறைகிறது. இக்கண்மாய் நிரம்பினால் சுற்றுப்பகுதியில் பல நூறு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு பயன்படும். தற்போது நீர் தேங்காமல் நெல், கரும்பு, மா, தென்னை விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. கண்மாயில் நீர் உறிஞ்சும் களை செடிகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பால் கீழ வடகரை குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை குழாய்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பால் கண்மாய் பெரும்பகுதி அளவு காணாமல் போய்விட்டது. 'பட்டத்தி குளம்' பட்டத்தி ஓடையாக மாறுவதற்குள் பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.