| ADDED : ஏப் 21, 2024 04:59 AM
கம்பம்: தேனி லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக நடந்த அனல் பறக்கும் பிரசாரம், நேற்று முன்தினம் தேர்தல் திருவிழா ஓய்ந்துள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள் இரவு பகல் பாராது வேலை செய்துள்ளனர். ஆரம்பத்தில் மந்த நிலையில் இருந்த ஓட்டுப்பதிவு பின் நேரம் ஆக, ஆக இறுதியில் 70 சதவீதத்தை தொட்டுள்ளது.இதனால் யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு கோணத்தில் பார்த்து, தனக்கு தான் வெற்றி என்கின்றனர். என்ன தான் வெளியில் நாம்தான் வெற்றி பெறுவோம் என பேசினாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இருந்து கொண்டு தான் உள்ளது.இதற்கிடையே பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், தொகுதி முழுவதும் தங்களின் கட்சியின் பேரூர், நகர் செயலாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் ஓட்டுச்சாவடியில் பதிவு எவ்வளவு, நமக்கு எவ்வளவு கிடைக்கும், எந்த பகுதியில ஆதரவு, எந்த பகுதியில் வீக், பிற கட்சிகளுக்கு என்ன கிடைக்கும் என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.சேகரிக்கும் புள்ளி விபரங்களை ஒருங்கிணைத்து ஒரு உத்தேச மதிப்பீடு செய்து, கட்சி தலைமைக்கு தெரிவிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.