| ADDED : ஜூலை 04, 2024 11:27 PM
கம்பம்:தேக்கடி, மூணாறில் நிறுத்தப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலாவை மீண்டும் துவக்க கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.கேரளாவில் தேக்கடி, மூணாறு, குமரகம், வயநாடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலாசெல்ல பல மணிநேரம் காரில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கொச்சிக்கு விமானம் மூலம் வருகின்றனர். கொச்சியிலிருந்து தேக்கடி, மூணாறு செல்ல பல மணி நேரம் காரில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.-வெளிநாடுகளில் ஹெலி டாக்சி எனப்படும் ஹெலிகாப்டர் போக்குவரத்து வசதிகள் உள்ளதை போல் கொச்சியிலும் சில ஆண்டுகளுக்கு முன் தேக்கடியில் துவங்கினர். ஆனால் கட்டண பிரச்னையால் நின்று போனது. தற்போது அச்சேவையை மீண்டும் துவங்க கேரள சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.விரைவில் மீண்டும் தேக்கடி, மூணாறு, குமரகம் போன்ற இடங்களுக்கு கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் வசதி துவக்கப்படும் எனத் தெரிகிறது. வயநாடு, தேக்கடி உள்ளிட்ட சில இடங்களில் ஹெலிபேட் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.