| ADDED : மே 09, 2024 06:08 AM
தேனி: தேனி நகராட்சிக்கு உட்பட்ட 3, 5, 6 வது வார்டிகளில் 5 நாட்களில் தெருநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றன. கடந்தாண்டு 5 வயது சிறுவன் முகத்தில் நாய் கடித்து பாதிப்பிற்கு ஆளானார். அதன்பின் சில நாட்கள் நகராட்சி தெருநாய்கள் பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். பின்னர் நாய்கள் பிடிப்பதை நிறுத்தினர். இதனால் நகர் பகுதியில் தெருநாய்கள் அதிகரித்தன. பல இடங்களில் நாய்கள் விரட்டியதால் டூவீலர்களில் சென்றவர்கள் பலர் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். கடந்த சில நாட்களாக நகராட்சி 3, 5, 6 வது வார்டு பகுதிகளில் உள்ள துாய்மைப்பணியாளர்கள் காலனி, கிணற்றுத்தெரு, மருதையன் தெரு, கம்பர் தெரு, இளங்கோ தெரு, மச்சால் தெரு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் கடந்த 5 நாட்களில் தெருநாய்கள் கடித்து கட்டதொழிலாளர்கள், 10 வயது சிறுமி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி பொது மக்கள் சார்பில் 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா நகராட்சி நகர்நல அலுவலர் கவிப்பிரியாவிடம் மனு அளித்தார். இதுதவிர கே.ஆர்.ஆர்., நகரில் மூன்று பெண்களை நாய் கடித்து குதறியதில் அவர்கள் சிகிச்சை பெற்றுவருவதால் அப்பகுதியிலும் நாய்களை அகற்றுவது அவசியம்.