| ADDED : ஜூலை 25, 2024 05:06 AM
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் இரவில் டாக்டர் பணியில் இல்லாததால் உயிரிழக்கும் அவல நிலை தொடர்கிறது.இம் மருத்துவமனைக்கு தாலுகா முழுவதிலும் இருந்தும் மலைப்பகுதி கிராமங்களில் இருந்து தினமும் 700 வெளிநோயாளிகள் 200 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு பொது மருத்துவம், முகப்பேறு, எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, மனநலம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இம் மருத்துவமனைக்கு மதியம் 3 மணி முதல் மறுநாள் காலை 8:00 வரை விபத்து அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும்பாலானோர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் அவலநிலை தொடர்கிறது.மிக முக்கியத்துவமான இருதய சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு எவ்வித முதலுதவி சிகிச்சையும் வழங்காமல் பிற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இதனால் வழியிலேயே பல உயிர்கள் பலியாகும் அவலம் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் தெற்குதெருவை சேர்ந்த 40 வயது கார் டிரைவர் ஒருவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இப் பிரிவில் டாக்டர் இல்லாததால் கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார். தற்போது இருதய சிகிச்சைக்கு 2 டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் காலையில் மட்டுமே வார்டில் சிகிச்சை அளிக்கின்றனர். இரவு பணிக்கு வருவதில்லை. இதனால் இரவிலும், அதிகாலையில் பாதிக்கப்படும் இருதய நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தாலும் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் முக்கியத்துவமான இருதய சிகிச்சை பிரிவுக்கு கூடுதலாக டாக்டர்களை நியமித்து 24 மணி நேரம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-