சின்னமனூர் : சின்னமனூர் விரிவாக்க பகுதிகளில் தார் ரோடு அமைக்க ஜல்லி கற்கள் மெத்தி இரு மாதங்களாகியும் ரோடு அமைக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். .சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. இதனால் புதிது புதிதாக விரிவாக்க பகுதிகள் உருவாகி வருகிறது. விரிவாக்க பகுதிகளில் குப்பை அகற்றாமல் சுகாதார பணிகளில் சுணக்கம் உள்ளது. சிவசக்தி நகரில் குப்பையை தெரு நுழைவு வாயிலில் கொட்டி வருகின்றனர். இங்கு குடிநீர், சாக்கடை வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லை.வாரச்சந்தை கட்டடம் கட்டி 10 ஆண்டுகள் ஆகிறது. பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதிகள் மதுபார் ஆக பயன்படுத்துகின்றனர். வாரசந்தையை பராமரிப்பு செய்யாமல் அருகில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தகர செட் அமைப்பதன் மூலம் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. சாமிகுளம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளின் வழியே செல்லும் பி.டி.ஆர்., பாசன வாய்க்கால், கழிவு நீர் ஓடையாக மாறி விட்டது.கருங்கட்டான்குளத்தில் நல்வாழ்வு மைய கட்டடம், காலை உணவு திட்ட சமுதாய சமையலறை, கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே புனரமைக்கப்பட்ட கணினி வரி வசூல் மையம் உள்ளிட்ட பல கட்டடங்கள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர். நகரின் மேற்கு பகுதியில் செல்லும் பாசன வாய்க்கால் சாக்கடை வாய்க்காலாக மாறி, விவசாயிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. அண்ணாமலை நகர் கிழக்கு வீதிகளில் சீரமைக்க ஜல்லி கற்கள் மெத்தி தார் ரோடு அமைக்காததால் டூவீலர்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.திடக்கழிவு மேலாண் மை செயலிழந்துள்ளதால் மக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்க கட்டப்பட்ட சாமி குளம் நுண் உரக்கூடம், விஸ்வக்குளம், வாரச்சந்தை கூடங்கள் பயன் இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான வீதிகள் குண்டும் குழியுமாக மாறி நடக்க முடியாத நிலையில் உள்ளது.சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, வடக்கு ரத வீதி, வ.உ.சி. வீதிகள், கருங்கட்டான்குளம் உள்ளிட்ட வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. சாமி குளம், காந்திநகர் காலனி, கீழப் பூலானந்தபுரம் பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளாததால் சுகாதர சீர்கேடு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கருத்து: குண்டும், குழியுமான தெருக்கள்
வேலுச்சாமி, ஓய்வுஆசிரியர், சின்னமனுார்: குப்பை அகற்றும் பணி மந்த நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடு வீடாக வந்து குப்பை சேகரிப்பு பணி முறையாக நடைபெறுவதில்லை. தெருக்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளங்கள் முறையாக மூடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. நகரில் உள்ள பெரும்பாலான வீதிகளில் இந்த பிரச்னை உள்ளது. அம்ரூத் திட்டத்தில் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றனர் அதை நடைமுறைப்படுத்த வில்லை.பராமரிப்பு இல்லாத பூங்காராமராஜ், சமூக ஆர்வலர், சின்னமனுார்: விரிவாக்க பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாதது பெரிய கொடுமை. வரி வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அழகர்சாமி நகர், கோகுலம் காலனி, திருநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தெருவிளக்குகள், சாலை வசதி, பொதுச் சுகாதார வசதி பிரச்னையாக உள்ளது. லட்சுமி நகர், கண்ணம்மா கார்டன் பகுதியில் கட்டப்பட்டுள்ள பூங்காக்களை பராமரிக்க வேண்டும்.