உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல்

மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா: அங்கன்வாடி இல்லாததால் சிரமம் போடி நகராட்சி 17 வது வார்டு குடியிருப்போர் குமுறல்

போடி: 'பராமரிப்பு இன்றி மதுப்பிரியர்களின் கூடாரமான சிறுவர் பூங்கா, பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம், குண்டும் குழியுமான ரோடுகள், கழிவுநீர் செல்ல வழியின்றி தெருவில் தேங்கும் சீரமைக்கப்படாத சாக்கடை கட்டமைப்புகளால் தொடர் சிரமம், சுகாதாரகேடு.' என, நாள்தோறும் பல்வேறு வசதி குறைபாடுகளால் போடி நகராட்சி 17 வது வார்டில் குடியிருப்போர் சிரமப்படுகின்றனர்.இந்நகராட்சியின் 17 வது வார்டில் பேச்சியம்மன் கோயில் தெரு, வடக்கு, கிழக்கு மறவர் காளியம்மன் கோயில் தெரு, சவுந்தரவேல் தெரு, பேட்டை தெரு, தியாகி கருப்பையா சந்து, கிழக்கு வெளி சந்து, சொக்கன் சந்து, அழகர் சந்து உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். காளியம்மன் கோயில் தெரு குடியிருப்போர் நிர்வாகிகளான பிரியா, மகாலட்சுமி, லட்சுமி, முருகவேல், சின்னையா ஆகியோர் கூறியதாவது:

அடிப்படை வசதி தேவை

வடக்கு காளியம்மன் கோயில் தெரு ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. சொக்கன் சந்தில் சாக்கடை தடுப்புகள் சேதம் அடைந்து ஓராண்டு ஆகியும் சீரமைக்கப்பட வில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி தெருவில் தேங்குகிறது. தெருக்களில் தேங்கிய குப்பைக் கழிவை அகற்றவும், சாக்கடை துார்வார துப்புரவுப் பணியாளர்கள் சரிவர வருவது இல்லை. போதிய சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக வெளியேறாததால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. முறையாக சாக்கடை தடுப்புகள் அமைக்காததால் பெரும் பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும் போது பள்ளம் தெரியாத நிலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. வடக்கு காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக பேவர் பிளாக் கற்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்தும் சீரமைக்காமல் பணிகள் கிடப்பில் உள்ளன. மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் பெரும் பள்ளங்களாக உள்ளன. வாகன விபத்துக்களை தவிர்க்கவும், அசம்பாவிதம் ஏற்படும் முன் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்கவும், சாக்கடை தடுப்புகள் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேனியில் இருந்து போடியில் நுழையும் போது போஜன் பார்க் பஸ் ஸ்டாப்பில் நகராட்சி சார்பில் சிறுவர்களுக்கான பூங்கா உள்ளது. இங்குள்ள இரும்பு வேலியை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர். மது பிரியர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் இல்லாததால் அடுத்த வார்டில் உள்ள மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர். கிழக்கு வெளி வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிளுடன் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. பட்டாசு வெடிக்கவும், இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் போதும் பூக்களை உதிர்க்கக் கூடாது என 15 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைக்கு வந்தது. அதன்பன் இந்த நடைமுறை பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பட்டாசு வெடிக்கவும், இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் போது பூக்களை உதிர்க்கவும் நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். சிறுவர்களுக்கான பூங்கா, அங்கன்வாடி மையம், 'போர்வெல்' தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, சாக்கடை, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துத்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ