பாதி வழியில் இறக்கி விட்ட அரசு பஸ்சால் பயணிகள் தவிப்பு
தேனி : மதுரையில் இருந்து கம்பம் வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சின் மோட்டார் ரெகுலேட்டரில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பயணிகள் தேனி கலெக்டர் அலுவலகம் முன் இறக்கவிடப்பட்ட நிலையில் கம்பம், உத்தமபாளையம் செல்ல வேண்டியவர்கள் 20 நிமிடங்கள் பஸ் இன்றி தவித்தனர்.போடி டெப்போவிற்கு சொந்தமான அரசு பஸ் (TN57 N2364) நேற்று காலை 11:00 மணிக்கு மதுரையில் இருந்து கம்பம் புறப்பட்டது. உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக வந்த பஸ்சில் முன்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியது.பஸ்சின் ரேடியேட்டரில் இருந்து வந்த துர்நாற்றம் அதிகம் வீச, தேனி கலெக்டர் அலுவலகம் முன் பயணிகள் இறக்கிவிடப் பட்டனர். பஸ்சில் தேனி வரை டிக்கெட் எடுத்து வந்தவர்கள் பிற பஸ்களில் மாறி தேனி பஸ் ஸ்டாண்ட் சென்றனர்.ஆனால், உத்தமபாளையம், கம்பம் வரை டிக்கெட் எடுத்தவர்கள் அந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் வரும் வரை 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்ததனர். பின்னர் அந்த வழியாக குமுளி சென்ற அரசு பஸ்சில் (TN 57 N 2470) பயணிகள் அனுப்பி வைக்கப்பட்ட பின் அரசு பஸ்சினை ஊழியர்கள் எடுத்து சென்றனர்.