தேனி : கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலையில் மது, போதைப்பொருட்கள் அரசின் விதிமீறி விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் பேசுகையில், சோதனை சாவடிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.டி.ஓ.,க்கள் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் விற்பனையை கண்காணித்து தகவல் தெரிவிக்க ஆர்.ஐ., வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகள், விடுதிகள் அருகே இயங்கும் கடைகளில் போதைப்பொருள் விற்பது தெரிந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.கள்ளச்சாராயம் தயாரித்தல், விற்பது, கள் விற்பனை, விதிமீறி மது, பிற மாநில மது வகைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் பற்றிய புகார்களை 93638 73078 என்ற வாட்ஸ் அப் எண், 10581 என்ற கட்டணமில்லா தொலைப்பேசிக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் பாதுகாக்கப்படும். மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் அனுமதிக்கப்பட அளவில் மட்டுமே ஸ்பிரிட் உபயோகபடுத்த வேண்டும். மருந்து கடைகளில் டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள் மட்டும் வினியோகிக்க வேண்டும். டாஸ்மாக்கில் மொத்த விற்பனை கூடாது. அனைத்து துறை அலுவலர்களும் போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கண்ணன், பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், மதுவிலக்கு டி.எஸ்.பி., ரவிச்சக்கரவர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.