| ADDED : மார் 25, 2024 05:25 AM
தேனி,: லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய 85 வயதிற்கு மேற்பட்டோர், 40 சதவீதத்திற்கு மேல் உடலில் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து ஓட்டளிக்க வசதியாக தேர்தல் ஆணையம் தபால் ஓட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.தேனி தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 85 வயதிற்கு மேற்பட்டோர் 14,219 பேர், மாற்றுத்திறனாளிகள் 11,096பேர் என 25,315 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தபால் ஓட்டளிக்க விருப்ப மனு வழங்கும் பணி மார்ச் 20 முதல் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 22 வரை 6 தொகுதிகளில் உள்ள 20,787 பேருக்கு தபால் ஓட்டு விருப்ப மனுக்கல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 637 பேர் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். பெரும்பாலானோர் தபால் ஓட்டளிக்க ஆர்வமில்லாமல் உள்ளனர். இதற்கு காரணம் ஓட்டுப்பதிவு நாளுக்கு முன்பே தபால் ஓட்டை அலுவலர்கள் நேரில் வந்து பெற்று செல்வார்கள்.நேரில் ஓட்டளிக்க சென்றால் வேட்பாளர்கள் தங்களிடம் வந்து ஓட்டளிக்க கெஞ்சுவது, கவனிப்பு செய்வது தாராளமாக இருக்கும். முன் கூட்டியே தாங்கள் தபால் ஓட்டு போட்டு விட்டால் வேட்பாளர்கள் தங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால் பலரும் தபால் ஓட்டளிக்க விரும்பாமல் தவிர்த்து வருகின்றனர்.