| ADDED : ஜூலை 25, 2024 05:10 AM
போடி: போடி அருகே சிலமலையில் பெண்ணுக்கு அலைபேசியில் தவறான குறுஞ்செய்தி அனுப்பிய நபரை தாக்கியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.போடி அருகே சிலமலை ஆசாரியர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் 34. இவர் சிலமலையில் இ-சேவை மையம் நடத்தினார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சூலப்புரத்தில் வசிக்கும் சதீஸ் என்பவரது தங்கை சங்கீதா. இவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளன.சங்கீதாவுக்கு நேற்று முன்தினம் லட்சுமணன் அலைபேசி மூலம் தவறான குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். தகவல் அறிந்த சதீஸ், அவரது உறவினர்கள் சிலர் சேர்ந்து நேற்று காலை லட்சுமணனை தகாத வார்த்தையால் பேசி அடித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த லட்சுமணன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உறவினர்கள் லட்சுமணனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி நேற்று சிலமலை மெயின் ரோட்டில் மதியம் 1:30 மணி அளவில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு ஏ.டி.எஸ்.பி., சுகுமார், போடி டி.எஸ்.பி., பெரியசாமி, தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை மறியலை விடமாட்டோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். மறியலால் 5 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.