| ADDED : ஜூலை 17, 2024 12:17 AM
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகளில் 5 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 60 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளனர். ஒப்பந்த பணியாளருக்கு மாவட்ட நிர்வாகம் தினமும் ரூ.609 வீதம் கணக்கிட்டு மாத சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பெற்ற மதுரை ராம் அண்ட் கோ நிறுவனம் பணியாளர்களுக்கு தினமும் ரூ.483 சம்பளத்தில் ரூ.83 யை, பணியாளர் வருங்கால வைப்புத் தொகை, பணியாளர் காப்பீடு செய்வதற்கு பிடித்தம் செய்து, பணத்தில் முறைகேடு நடப்பதாகவும், பணியாளர்களுக்கு வங்கி பாஸ்புக், ரசீது வழங்கவில்லை என பணியாளர்கள் புகார் தெரிவித்து நேற்று முன்தினம் (ஜூலை 15ல்) வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நகரில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.கவுமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி முடிக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். நகராட்சி தலைவர் சுமிதா, தொடர் பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி, காப்பீட்டுக்கு பிடித்தம் செய்ததொகைகளுக்கான ரசீது, பாஸ் புத்தகம் வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர். நேற்று காலை முதல் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.