| ADDED : மே 30, 2024 03:53 AM
கம்பம்: மணலாறு முதல் மகாராஜா மெட்டு வரை 10 கி.மீ.தூரத்திற்கு ரோடு அமைக்கும் பணி ஏழு ஆண்டுகளாக நடந்து நிறைவு பெற்றுள்ளது.தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கிய இடம் பிடிக்கிறது. மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு இரவங்கலாறு, வெண்ணியாறு மகாராசா மெட்டு, தூவானம் போன்ற இடங்களில் கண்களுக்கு விருந்தளிக்கும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. நீண்டகாலமாக தனியார் தேயிலை தோட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்த இந்த ரோட்டை 12 ஆண்டுகளுக்கு முன் மாநில நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. சின்னமனூரில் இருந்து இரவங்கலாறு வரை உள்ள 46 கி.மீ. தூர ரோட்டை ரூ.80கோடியில் புதுப்பிக்கும் பணி 2017 ல் துவக்கியது. இதில் சின்னமனூரில் இருந்து மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு வரை 36 கி.மீ. தூரம் ரோடு புதுப்பிக்கப்பட்டது. மணலாறு முதல் மகாராஜா மெட்டு வரை கடைசி 10 கி.மீ. தூரத்திற்கு ரோடு புதுப்பிக்கப்படவில்லை.கடந்த 2019ல் கொரோனோ தொற்று ஆரம்பமானதால் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் 2021ல் பணிகளை துவங்க முயன்ற போது வனத்துறை அனுமதிக்கவில்லை. இதற்கு காரணம் 2020 ல் மேகமலை சரணாலயம், புலிகள் காப்பகமாக மாறியதென்றும், டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையிடம் அனுமதி பெற்று பணிகளை துவங்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகளாக ரோடு புதுப்பிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன போக்குவரத்து சிரமமாக மாறியது.இந்நிலையில் கடந்த 2023 ல் 10 கி.மீ. ரோடு அமைக்க தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை அனுமதி வழங்கியது. அதன்பின் நெடுஞ்சாலைத்துறை பணிகளை துவக்கியது. அனுமதி கிடைத்தவுடன் 3 கி.மீ. தூரம் ரோடு வேகமாக போடப்பட்டது. மீதமுள்ள 7 கி.மீ. தூர ரோடுபணி இழுபறியாக இருந்தது. கடந்த 2017 ல் துவங்கிய பணி ஆறு ஆண்டுகளை கடந்து 7 ம் ஆண்டில் நுழைந்தது. ஒரு வழியாக தற்போது ரோடு பணிகள் முடிவிற்கு வந்துள்ளது. சின்னமனூரிலிருந்து மகாராஜாமெட்டு வரை 46 கி.மீ. தூரத்திற்கு ரோடு பளீச் ஆக மாற்றப்பட்டுள்ளது.