| ADDED : மே 03, 2024 06:03 AM
மூணாறு: வேலை பளுவால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான எஸ்.ஐ., மூணாறில் சிக்கினார்.கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., யாக பணியாற்றிய 52 வயது நபர் திடிரென ஏப்.30ல் மாயமானார். வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீட்டில் கடிதம் சிக்கியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கோதமங்கலம் போலீசில் அவரது மனைவி கணவரை காணவில்லை என புகார் அளித்தார். அவரது அலைபேசி சிக்னலை வைத்து 'சைபர் கிரைம்' போலீசாரின் உதவியுடன் விசாரணை நடந்தது. இதனிடையே உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மூணாறில் சுற்றித் திரிந்தவரை இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் மீட்டு, கோதமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் மூணாறுக்கு வந்து எஸ்.ஐ.,யை அழைத்துச் சென்றனர். தகவல் அறிந்து எஸ்.ஐ., குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.