உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் நகராட்சியில் சோலார் பேனல் பழுதாகி வீணாகிறது: அலட்சியத்தால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் மின் கட்டணம்

பெரியகுளம் நகராட்சியில் சோலார் பேனல் பழுதாகி வீணாகிறது: அலட்சியத்தால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் மின் கட்டணம்

பெரியகுளம் நகராட்சியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு 50 சதவீதம் மானியத்தில் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு திட்டத்தில் ரூ. 20 லட்சம் செலவில் சோலார் பேனல்கள் நகராட்சி அலுவலக மாடியில் அமைக்கப்பட்டது. சூரிய சக்தி மின் திட்டத்தில் கிடைக்கும் மின்சாரத்தில் கமிஷனர், பொறியாளர் அறைகள், கம்ப்யூட்டர் அறைகள் ஆகியவற்றிற்கு ஏ.சி., வசதியும், பிற பிரிவு அலுவலங்களுக்கு மின்விசிறிகள், மின் விளக்குகளுக்குகள் செயல்படுத்தப்பட்டன. இத் திட்டத்தின் மூலம் நகராட்சிக்க பல லட்சம் மின் கட்டணம் மிச்சம் ஆனது. இதனால் சோலார் மின் திட்டத்திற்கு வரவேற்பு ஏற்பட்டது. ஒரிரு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த சோலார் பேனல் முறையாக பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்து பின் படிப்படியாக சோலார் உற்பத்தி முடங்கியது. அதனை தொடர்ந்து இத் திட்டத்தை நகராட்சி கிடப்பில் போட்டது.இயக்குனர் உத்தரவிலும் அலட்சியம்:நகராட்சி அலுவலகத்தில் 4 மின் இணைப்புகளுக்கு இரு மாதத்திற்கு 5 ஆயிரம் யூனிட் முதல் கோடைகாலத்தில் 6 ஆயிரம் மின் யூனிட் வரை தேவைப்படுகிறது. இதற்கு கட்டணமாக நகராட்சி ரூ. 55 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்துகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை நகராட்சி செலவிடுகிறது.கடந்தாண்டு நகராட்சி நிர்வாக இயக்குனர் விஜயகுமார், திடீர் ஆய்வில் பெரியகுளம் நகராட்சி மாடியில் இருந்த சோலார் பேனல் பழுதாகி முடங்கியதை கண்டு அப்போதைய இன்ஜினியர் சத்தியமூர்த்தியை கண்டித்தார். சோலார் பேனல் இயங்குவதற்கு தேவையான பேட்டரி வாங்கி செயல்படுத்த ரூ. 1 லட்சத்திற்கு உடனே அனுமதி அளித்தார். நிர்வாக இயக்குனரின் உத்தரவை நகராட்சி நிர்வாகம் இதுவரை செயல்படுத்தாமல் 'சேவிடன் காதில் ஊதிய சங்குபோல்' ஓராண்டாகியும் சோலார் பேனல் செயல்படாமல் கிடக்கிறது.நாடுமுழுவதும் சூரிய ஒளிமின் திட்டத்தை செயல்படுத்த மத்திய,மாநில அரசுகள் முனைப்பு காட்டி வரும் நிலையில் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய நகராட்சி நிர்வாகம் சோலார் மின் திட்டத்தை முடக்கி வைத்து அரசின் நிதியை வீணாடித்து வருகிறது. பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சோலார் மின்திட்டம் செயல்பாட்டில் காட்டும் அலட்சியத்தை போக்க மாவட்ட நிர்வாகம் தலையீட்டு சோலார் பேனல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை