| ADDED : ஜூன் 26, 2024 07:48 AM
கம்பம்: கம்பத்தில் டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி பெண்கள் மீண்டும் போராட்டம நடத்தியதால், டாஸ்மாக் கடை மூடப்பட்டது.கம்பம் ஏகலூத்து ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் அடிக்கடி தகராறு நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்த அடிதடி தகராறில் காயமடைந்த இதே பகுதியை சேர்ந்த சாய்குமார், வீட்டில் சிகிச்சையில் இருந்த போது இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேறு வழியின்றி டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இரண்டு நாட்கள் மூடியிருந்த நிலையில் நேற்று பகல் 3:00 மணியளவில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை துவங்கியது. தகவலறிந்த அப்பகுதி பெண்கள் மீண்டும் திரண்டு வந்து கடையை அடைக்க சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் தெற்கு போலீசார் பெண்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் கடையை அடைத்தால் தான், இந்த இடத்தை விட்டுச் செல்வோம் என, பெண்கள் உறுதியுடன் நின்றார்கள். வேறு வழியின்றி டாஸ்மாக் கடை மீண்டும் மூடப்பட்டது. கடையை மீண்டும் திறந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பெண்கள் தெரிவித்து, கலைந்து சென்றனர்.