உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாகச பயணம் சென்று மலை மீது சிக்கிய சுற்றுலாப் பயணிகள்; 22 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு

சாகச பயணம் சென்று மலை மீது சிக்கிய சுற்றுலாப் பயணிகள்; 22 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு

மூணாறு : நெடுங்கண்டம் அருகே விதிமுறைகள் மீறி சாகச பயணம் சென்ற சுற்றுலாப் பயணிகள் மலை மீது வாகனங்களுடன் சிக்கிக் கொண்டனர்.இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே தூக்குபாலம் பகுதியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் நாலுமலை வியூ பாய்ண்ட் உள்ளது. அப்பகுதியில் இருந்து சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றையும், தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் சில பகுதிகளையும் ரசிக்கலாம். அப்பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சாகச பயணம் உள்ளிட்டவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.அதனை மீறி 'வாட்ஸ் அப்' உள்பட சமூக வலை தலங்கள் மூலம் அறிமுகமான கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழு 22 வாகனங்களில் நேற்று முன்தினம் நாலுமலை வியூ பாய்ண்ட் பகுதிக்கு சாகச பயணம் சென்றனர். அப்போது பலத்த மழை பெய்ததால் வாகனங்கள் சேறும், சகதியிலும் சிக்கி இயக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மலை மீது சிக்கிக் கொண்டனர். இரவு நெருங்கியதும் அச்சமடைந்த பயணிகளில் சிலர் உள்ளூர்வாசிகளை தொடர்பு கொண்ட போது சுற்றுலாப் பயணிகள் மலை மீது சிக்கிக் கொண்ட தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்களை பொது மக்களின் உதவியுடன் மீட்டு ராமக்கல்மேட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் வருவாய்துறையினர், போலீசார் ஆகியோர் ஆபத்தான முறையில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்டனர். சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற 22 வாகனங்களின் டிரைவர்கள் மீது தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றது, வருவாய் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் அத்து மீறி நுழைந்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ