| ADDED : ஜூன் 15, 2024 06:57 AM
பெரியகுளம் : பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில், தேனி வனவியல் பயிற்சி கல்லூரியைச் சேர்ந்த 120 வனக்காவலர்களுக்கு வனங்களுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்வது குறித்து பயிற்சி நடந்தது. பயிற்சியினை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் துவக்கி வைத்து பேசுகையில்: வனங்களுக்கு ஏற்ப பழ பயிர் சாகுபடி முறைகள், ரகங்கள் மற்றும் விவசாயிகளில் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் வனத்துறையின் பங்கு குறித்தும், முருங்கை, நாவல், கொடுக்காப்புளி, வில்வம், நெல்லி, பழ நாற்றுகள் , மர வாசனை பயிர்களான சாதிக்காய், பட்டை, கிராம்பு நாற்றுக்கள் உற்பத்தி, வனத்தில் பயிரிடுவது குறித்து விளக்கினார். பேராசிரியர் முத்துராமலிங்கம் நாற்றங்கால் தொழில்நுட்பங்களான தரமான நாற்று உற்பத்தி,ஒட்டு கட்டுதல் முறைகள், தண்டுக்குச்சிகள் உற்பத்தி பற்றிய பேசினார்.வனத்துறையின் மூத்த அலுவலர் ரவீந்திரன், பேராசிரியர்கள் முத்தையா, ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சமூக அறிவியல் துறை தலைவர் குருநாதன் செய்திருந்தார்.